நாமக்கல் நல்லிபாளையத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை முதல்வர் ஸ்டாலின் நேற்று தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முதல்வர் அழைப்பு
தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இச்சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.
நாமக்கல் நல்லி பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை நாமக்கல் நல்லிபாளையத்துக்கு கருப்பு உடை அணிந்து முதல்வர் வந்தார்.
தொடர்ந்து அங்கு செல்லப்பன் என்பவரது வீட்டின் முன்பு உள்ள கொடி கம்பத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியேற்றினார்.
மேலும், மசோதா நகலை தீயிட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்தார். முன்னதாக ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம்’ எனவும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தீ பரவட்டும்
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தொகுதி மறுவரையறை-தமிழகம் எங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும். அன்று, தமிழகத்தில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது.
டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. இன்று, தமிழர்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயை பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜகவின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும்...
தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகள், தேர்தல் பிரச்சாரங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டும், கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.
மேலும், பல்வேறு இடங்களில் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து ஏராளமான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.