திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் | பிரதிநிதித்துவப் படம்
சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவை மற்றும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும், 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பா? - கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் தொகையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் 15 லட்சம் மக்களும் வசிப்பதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.