சென்னை: திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, மதிமுக 4, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.
குழுக்களுடன் ஆலோசனை: இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அதன்படி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் சார்பில் கட்சி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 40 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலையும் வழங்கினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் கேட்ட தொகுதிகளில் சிலவற்றை அவர்களும், அவர்கள் விரும்பும் தொகுதிகளில் சிலவற்றை நாங்களும் கேட்கிறோம். ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும். சென்னையிலும் தொகுதிகளை கேட்டுள்ளோம்’’என்றார்.
இதுதவிர தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, கொமதேக, மமக, முஸ் லிம் லீக் உள்ளிட்ட இதர கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்களின் விருப்பப் பட்டியலை திமுக குழுவிடம் வழங்கினர்.
காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் திமுகவின் தொகுதிகளைக் குறிவைத்து கேட்பதால் திமுகவுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை இறுதி செய்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடையும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மஜக-வுக்கு ஒரு தொகுதி: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறும்போது, ‘‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை கொடுத்துள்ளோம். முதல்வர் எந்த தொகுதியை வழங்கினாலும் மகிழ்ச்சிதான்’’ என்றார்.
புதுச்சேரி நிலவரம்: இதற்கிடையே புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் சர்ச்சைகள் குறித்து கிரிஷ் சோடங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் ‘‘புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தொகுதி உடன்பாடு சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் அதிகப்படியான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.