பிரேமலதா

 
தமிழகம்

“முதல்வருக்கு தலைகுனிவு என்றால், ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டு எழும்” - பேரவையில் பிரேமலதா ஆவேசம்

தமிழினி

சென்னை: “காவிரி நமது உரிமை. அதை தர வேண்டியது கர்நாடகாவின் கடமை. மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது. கர்நாடகா சென்று முதல்வர் விஜய் பேசுவது நல்லதுதான், தவறல்ல. கர்நாடகா செல்லும்போது தமிழக முதல்வருக்கு ஒரு தலைகுனிவு என்றால், ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டு எழும்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசும்போது, “முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தவெக பெயர் மாற்றியுள்ளது என சொல்கிறார்கள். தேமுதிகவைப் பொறுத்தவரை மக்கள் விரும்பும், வரவேற்கும் திட்டங்கள் தொடர வேண்டும்.

அது எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும், அது பிரச்சினை இல்லை. இவை அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் நடக்கிறது.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இன்று அதை அறிவிக்கவில்லை; வெகு விரைவில் அறிவிப்பீர்கள் என நம்புகிறோம். நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளில் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. நீட், மேகேதாட்டு, காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளையும் முதல்வர் ஒன்றிணைத்து, பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

காவிரி நமது உரிமை. அதை தர வேண்டியது கர்நாடகாவின் கடமை. மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது. கர்நாடகா சென்று முதல்வர் விஜய் பேசுவது நல்லதுதான், தவறல்ல. முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல முடிவெடுத்தது சரியான முடிவு. இருவரும் முதல்முறை முதல்வர்கள்.

கர்நாடகா செல்லும்போது தமிழக முதல்வருக்கு ஒரு தலைகுனிவு என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டு எழும். எங்கள் முதல்வரை அவமதிக்க கர்நாடகாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மக்கள், விவசாயிகள் முதல்வருக்கு துணை நிற்பார்கள்.

உங்களின் உபரி தண்ணீர் எங்களுக்கு தேவையில்லை; எங்களின் உரிமையைதான் நாங்கள் கேட்கிறோம். 717 மதுக்கடைகளை மூடியதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னும் என் தொகுதியில் கூட மூடப்படவில்லை. தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT