காரைக்குடியில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.

 
தமிழகம்

“யாரிடமும் ரூ.5, ரூ.10 வசூல் செய்கிற கட்சி அல்ல தேமுதிக” - பிரேமலதா பேச்சு

இ.ஜெகநாதன்

சிவகங்கை: “யாரிடமும் ரூ.5, ரூ.10 வசூல் செய்கிற கட்சி தேமுதிக இல்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வியாழக்கிழமை இரவு தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பிரச்சாரத்தில் பிரேமலதா பேசியது: ”வருகிற தேர்தல் தேமுதிகவுக்கு மட்டுமல்ல, அனைத்து கட்சிகளுக்கும் முக்கியமானது. இதில் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும்.

நேற்று முளைத்த காளான் (விஜய்) எடுபடாது; ஒரு நாள் மழைக்கே தாங்காது. யாரிடமும் ரூ.5, ரூ.10 வசூல் செய்கிற, கட்டப் பஞ்சாயத்து செய்கிற கட்சி தேமுதிக கிடையாது. மற்ற கட்சிகள் பிரியாணி ரூ.100, சோறு, பீர் கொடுத்து லாரியில் ஏற்றி வந்துதான் கூட்டம் கூட்ட முடியும். தேமுதிகவுக்கு கூட்டம் தானாக கூடும்.

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனபோது, ஏன் சிவகங்கை மாவட்டத்தில் எம்எல்ஏ வரவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்த தேர்தலில் நிச்சயம் சிவகங்கை மாவட்டத்திலும் தேமுதிக நின்று வெற்றி பெறும். விஜயகாந்த் உடல்நலக்குறைவால் 10 ஆண்டுகள் தேமுதிகவுக்கு தொய்வு ஏற்பட்டது.

ஆண்ட கட்சியோ, ஆளுகிற கட்சியோ பூத் கமிட்டி அமைப்பது பெரிய விஷம் அல்ல. நாம் 63,000 பூத் கமிட்டிகள் அமைத்துவிட்டோம். வாக்குகள் திருடு போகாமல் மக்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் கொலைகாரர்கள், திருடர்கள் வாழும் பூமியாக உள்ளது.

ஒற்றை விரல் புரட்சியை ஏற்படுத்தும் வாக்குரிமை தான் மக்களிடம் உள்ளது. அதையும் திருட வருகின்றனர். அவர்களை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும். வாக்குரிமையை நிலைநிறுத்துவது அரசு, தேர்தல் ஆணையம், நிதிபதிகளின் கடமை. வருகிற 2026 தேர்தலில் மாய, மந்திரமெல்லாம் நடைபெறும். இதுவரை கூட்டணி அமைச்சரவை பார்த்ததில்லை. ஆனால், இந்த முறை கூட்டணி அமைச்சரவைதான் அமையும்.

காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்ந்தும், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. வரி உயர்த்தப்பட்டும், வாழ்க்கை தரம் உயரவில்லை. கல்விக்குடியாக இருந்த இப்பகுதியில் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி மதுக்கடைகளை திறந்து நிரந்தர மது குடிப்பவர்களாக மாற்றிவிட்டனர். தற்போது தமிழகமே கேள்விக்குறியாக மாறிவிட்டது. விஜயகாந்த் கூறியபடி, துளசி கூட வாசம் மாறும்; தவசி மாறியதாக வரலாறு கிடையாது. அதுபோல தான் கூறும் வாக்குறுதிகளும்” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT