சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள கடையில் பட்டாசுகளைத் தேர்வு செய்த வாடிக்கையாளர்கள்
சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு மக்கள் வருவதால் பட்டாசு விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தீபாவளிக்காக ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுக்கு நாடு முழுவதும் தனி மதிப்பு உள்ளது.
நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதத்துக்கு மேல் சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிவகாசியில் நிரந்தர உரிமம் பெற்ற 3,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன.
விதிமுறைகள், கட்டுபாடுகள் காரணமாக பட்டாசுகளை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகம் என்பதால், நாட்டின் பிற பகுதிகளில் விற்பனைக்கு வரும்போது பட்டாசு விலை அதிகரிக்கிறது. ஆனால், உற்பத்தி செய்த இடத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், சிவகாசியில் உள்ள பட்டாசு விற்பனைக் கடைகளில் விலை குறைவாக பட்டாசு கிடைக்கிறது.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நிரந்தரப் பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுகிறது. அதிகத் தள்ளுபடி, புது ரக பட்டாசுகள், நேரடியாக வெடித்துப் பார்த்து வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில மக்களும் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசு வாங்குவதை விரும்புகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில் பட்டாசு வாங்குவதற்காக வெளியூர் மக்கள் சிவகாசிக்கு அதிகளவில் வந்துள்ளதால் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது. இதனால் சிவகாசி நகர் பகுதி மட்டுமின்றி சாத்தூர் சாலை, விருதுநகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகையில், “ஆடிப்பெருக்கு அன்று தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனை தொடங்கியது. தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்த நிலையில், கடந்த வாரம் தொடர் விடுமுறையை ஒட்டி வெளி மாவட்டங்களில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க வந்தனர். தீபாவளி நெருங்கி விட்டதால் இந்த வாரம் வெளி மாவட்ட மக்கள் வருகை அதிகரித்து பட்டாசு விற்பனை மும்முரம் அடைந்துள்ளது. ஆயுத பூஜைக்குப் பின் பட்டாசு விற்பனை களைகட்டும்“, என்றனர்.