சென்னை: மே தினத்தையொட்டி வரும் 1-ம் தேதியன்று, சென்னை மாவட்டத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மே தினம் வரும் வெள்ளிக் கிழமை (மே 1) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் மே தினத்தன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் ஆகியவற்றின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் இயங்கக்கூடாது. கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.