கோப்புப் படம்

 
தமிழகம்

விபி-ஜி ராம் ஜி திட்ட பயனாளிகளிடையே பாகுபாடா? - கள்ளக்குறிச்சியில் எழுந்த குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களில் ஒருவருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்குவதாகவும் மற்றவர்களுக்கு குறைந்த நாட்களே வேலை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ‘வளா்ந்த பாரதம் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி-ஜி ராம் ஜி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வேலை நாட்களும் 125 நாட்களாகவும், ஒரு நாளைக்கான ஊதியம் ரூ.345 ஆகவும் உயர்த்தப்பட்டு 1-7-2026 முதல் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில் 125 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிடாகம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பயனாளிகளுக்கு சராசரியாக 14 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்கு மட்டும் 60 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் விபி-ஜி ராம் ஜி திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் அதே பெண்ணுக்கு ஜூலை 1 முதல் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டதால், சக பயனாளிகள் பணித்தள பொறுப்பாளரிடம், ‘ஒருவருக்கு மட்டுமே தொடர்ந்து வேலை வழங்குவதேன்?’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பிடாகம் ஊராட்சியைச் சேர்ந்த விபி-ஜி ராம் ஜி திட்ட பயனாளிகள் கூறும் போது, “கடந்த 2025-26 நிதியாண்டிலும் குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வேலை வழங்கி வந்தனர். 2026-27 நிதியாண்டிலும் தொடர்ந்து வேலை வழங்குகின்றனர்.

அந்த வகையில் ஒரு பெண்ணுக்கு மட்டும் 127 நாட்கள் வேலை வழங்கியும், மற்றவர்களுக்கு 20 முதல் 25 நாட்கள் என மிகக் குறைந்த நாட்களே பணி வழங்கி, பாரபட்சம் காட்டுகின்றனர். ‘தொடர்ந்து வேலை வழங்கப்படும் அந்தப் பெண் வசதியானவர்’ என கடந்தாண்டு கண்டறியப்பட்டு, திட்டத்தின் கீழ் பணி செய்ய தகுதியற்றவர் என நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது லாரி வாடகைத் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு மட்டும் தொடர்ந்து பணி வழங்கி, எங்களுக்கு மட்டும் சுழற்சி முறை எனக் கூறி பாரபட்சம் காட்டுவதேன்?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுதொடர்பாக சில பணித் தள பொறுப்பாளர்களிடம் கேட்ட போது, “மொத்தமாக 127 நாட்கள் வேலை வழங்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு 2025-26 நிதியாண்டில் 62 நாட்களும், அதையடுத்த ஆண்டில் 44 நாட்களும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின் தொடர்ந்து வேலை வழங்குவதைக் கணக்கிட்டு 127 நாட்கள் என கூறுகின்றனர்” என்றார்.

ஒரு நபருக்கு மட்டும் இவ்வாறு தொடர்ந்து பணி வழங்குவது தொர்பாக பிடாகம் ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமாரை தொடர்புகொண்டபோது அவர் பேச முன்வரவில்லை. தொடர்ந்து உளுந்தூர் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரிடம் கேட்டபோது. “முந்தைய திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு மேல் வழங்க இயலாது.

ஜூலை 1 முதல் 125 நாட்களாக உயர்த்தப் பட்டுள்ளது. பயனாளிகளுக்கு சுழற்சி முறையில் வழங்க வேண்டும், தொடர்ந்து வழங்கப்படக் கூடாது. இதுதொடர்பாக எனக்கு புகார் ஏதுமில்லை. இருப்பினும் களத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT