சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,765 மதுக்கடைகள் இயங்கி வரும் நிலையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் 717 மதுக்கடைகளை 2 வாரங்களில் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் மீது பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. தற்போது புதிய ஆட்சி அமைந்த பிறகும் இந்த நடைமுறை தொடர்கிறது என மதுபிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒருசில இடங்களில் ஏன் கூடுதல் தொகை கேட்கிறீர்கள் என்ற வாக்குவாதம் செய்யும் வீடியோக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்தவண்ணம் உள்ளன.
எனவே, கூடுதல் விலைக்கு மதுவிற்கும் கடை பணியாளர்கள்மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அனைத்து மண்டலத்திலுள்ள பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடை பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என ஏற்கெனவே சட்டம் இருக்கும் நிலையில், அதைக் கடைபிடிக்க தற்போது மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது வாங்கவருவோரின் வயது குறித்து சந்தேகம் இருந்தால் அடையாள அட்டைகளை கொண்டு சரிபார்க்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.