கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகம் தழுவிய போராட்டம்: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

பெ.ஜேம்ஸ்குமார்

செங்கல்பட்டு: ‘புதிய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகள் எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது’ என தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டங்களில் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஓய்வுக்குப் பிறகு மிகக் குறைந்த ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரச் சுமைகள் அதிகரித்துள்ள நிலையில், புதிய அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஓய்வூதியர்களிடையே நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு முழுமையாக ஏமாற்றமாக மாறியுள்ளது.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,850 ஆக உயர்த்துதல், அகவிலைப்படி வழங்குதல், மருத்துவப் படி அறிவித்தல், ஓய்வூதியர் உயிரிழந்தால் குடும்ப நலநிதி வழங்குதல், பண்டிகை முன்பணம் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இந்தக் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து அறிவிக்க வேண்டும். குறிப்பாக குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850, அகவிலைப்படி, மருத்துவப் படி, குடும்ப நலநிதி மற்றும் பண்டிகை முன்பணம் ஆகியவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாநிலம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களை திரட்டி விரிவான போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகும். ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு மனிதநேய அடிப்படையில் தங்களது கோரிக்கைகளை ஏற்று விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என முதல்வருக்கு கனிவுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT