தமிழகம்

தலைதூக்கும் குடிநீர் பிரச்சினை - ‘சிவப்பு’ மண்டலத்தில் திண்டுக்கல் மாவட்டம்!

மறியலில் ஈடுபட தொடங்கிய மக்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக கிராமப்புறங்கள் முதல் நகர்புறம் வரை குடிநீர் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியுள்ளதால், மக்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபடுவது தொடர்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் அதி தீவிர தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளதாக சிவப்பு மண்டலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள், மூன்று நகராட்சி, ஒரு மாநகராட்சி உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை குடிநீர் ஆதாரமாக திகழும் ஆத்தூர் நீர்த்தேக்கம் முற்றிலும் வறண்டு கைவிட்டதால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தில் கூடுதல் நீர் பெற்று சமாளித்து வருகின்றனர். அதுவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நான்கு நாட்களுக்கு ஒரு முறை என குறைந்த நேரமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கு தண்ணீர் தரும் வகையில் திண்டுக்கல் நகரில் வார்டு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள் ரூ.64 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவைகளை முடிந்தவரை சமாளித்து வருகின்றனர். மேலும், அதிக தட்டுப்பாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் நடக்கிறது. இதற்காக தனியார் லாரிகளும் பயன்படுத்தப்படுவதால் இதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கைகொடுப்பதால், மக்கள் போராட்டம் சாலை மறியலுக்கு வராத வகையில் திறமையான நிர்வாகம் மூலம் சமாளித்து வருகின்றனர். இருந்தபோதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரமாகத் திகழும் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

வேடசந்தூர், குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் முடிந்தவரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதிலும், அவ்வப்போது குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி விநியோகத்தில் குளறுபடி காரணமாகவும் தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது.

குடிநீர் கேட்டு குஜிலியம்பாறை, வேடசந்தூர் பகுதிகளில் மக்கள் சாலை மறியல் செய்வது தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளின் குடிநீர் ஆதாரமான வைகை ஆற்றிலும் தண்ணீர் இல்லாததால் ஆற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறுகளிலும் தண்ணீர் வற்றி வருகிறது.

தண்ணீர் பிரச்சினை இருக்கும் நேரத்தில், ஊராட்சி நிர்வாகங்கள் சில விநியோகத்தில் குளறுபடி செய்து பிரச்சனைகளை உருவாக்குவதும் தொடர்கிறது. மழை பெய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் நிலைதான் உள்ளது.

தற்போது அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் தேங்கும் நீரையும் வெளியேற்றிவிடுகிறது. குடிநீர் விநியோகத்தில் திண்டுக்கல் மாவட்டம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சிவப்பு மண்டலத்திலேயே இன்னும் உள்ளது. தொடர் மழை பெய்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்தால் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக உள்ள குடிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும் என்கின்றனர் அதிகாரிகள்.

SCROLL FOR NEXT