சென்னை: ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் வழங்குவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இதற்கான நடைமுறையை தெரிந்துகொள்ள தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வெளிப்படையான, பொதுமக்களுக்கு எளிமையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கும் நோக்கில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசின் பொதுச் சேவைகளை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. செப்.2-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் செப். 15-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை அச்சு வடிவத்துக்கு பதிலாக டிஜிட்டல் வடிவில் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் டிஜிட்டல் வாகனப் பதிவுச் சான்றிதழை முறையே சாரதி (SARATHI) மற்றும் வாஹன் (VAHAN) இணையதளங்கள் மூலமாகவும், டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் எம்பரிவாஹன் (mParivahan) கைப்பேசி செயலிகள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இந்த நடைமுறையை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வழிமுறைகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதாகையில் சாரதி இணையதளம் மூலம் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை (DL) பதிவிறக்கம் செய்வது, ஓட்டுநர் உரிமத்தில் கைபேசி எண்ணை அப்டேட் செய்வது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான விண்ணப்ப எண்ணைக் கண்டறிவது, வாஹன் இணையதளம் மூலம் டிஜிட்டல் பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது, வாகன உரிமையாளரின் கைபேசி எண்ணை அப்டேட் செய்வது, டிஜி லாக்கர் மற்றும் எம்பரிவாஹன் கைபேசி செயலி மூலம் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் அல்லது அணுகுவது தொடர்பாக வழிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட வழிமுறைகளை காணொளிகளாக போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் காணலாம். பொதுமக்களுக்கு டிஜிட்டல் ஆவணங்களின் அச்சுப் பிரதி தேவைப்பட்டால், தமிழகம் முழுவதும் உள்ள எந்தவொரு இ-சேவை மையத்திலும் கைபேசி எண்ணுக்கு பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்து, ஒரு ஆவணத்துக்கு ரூ.60 என்ற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி வண்ண அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம்.