மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசு. (கோப்பு படம்) | (உள்படம்): தீபாவளி வாழ்த்து வீடியோவில் அமைச்சர் கீர்த்தனா கையில் பிடித்து வெடித்த பட்டாசு.

 
தமிழகம்

சீன பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினாரா அமைச்சர் கீர்த்தனா?

சமூக வலைதள வீடியோவால் வெடித்த விவாதம்

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: தீபாவளி வாழ்த்து தெரிவித்து கையில் வைத்து பட்டாசு வெடித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்டு, அவர் சீனப் பட்டாசை வெடித்து தீபாவளி கொண்டாடியதாக பலர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

சிவகாசி பகுதியில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீரி அமைப்பின் வழிகாட்டுதலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் குறைந்த அளவிலான புகை வெளியிடும் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டில் பட்டாசு உற்பத்தியில் அனைத்து படிநிலைகளும் மனித கைகளால் செய்யப்படுவதால், கூடுதல் கால நேரம் மற்றும் உற்பத்தி குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது.

ஆனால், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி நடப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவிலான பட்டாசுகளை உற்பத்தி செய்வதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்தியாவில் பட்டாசு பொருட்களுக் கான ஏற்றுமதி மற்றும் கப்பலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை உள்ளதால் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் சீனாவில் இருந்து விளையாட்டு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் என்ற பெயரில் பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பதால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சிவகாசி தொகுதி தவெக எம்எல்ஏவும், தொழில்துறை அமைச் சருமான கீர்த்தனா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வீடியோவில், பேன்சி ரக பட்டாசை கையில் வைத்து வெடிக்கும் காட்சியை பதிவிட்டிருந்தார்.

அவர் கையில் வைத்து வெடிக்கும் பட்டாசை குறிப்பிட்டு, சீன பட்டாசு வெடித்து அமைச்சர் தீபாவளி கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘அமைச்சர் கீர்த்தனா வெடித்த பட்டாசில் வஜ்ரா என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோன்ற பட்டாசுகள் சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் அது சீன பட்டாசா என உறுதியாகத் தெரியவில்லை’ என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT