சென்னை: அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அடையாறில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெகவுக்கு 108 இடங்களில்தான் மக்கள் வெற்றியை கொடுத்தார்கள், திமுக, அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 126 எம்எல்ஏ.க்களை கொடுத்தார்கள்.
இந்த 126 பேரும் தவெகவுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பதை விஜய்யும், அவரைச் சுற்றி இருப்பவர்களும் மறந்துவிடக்கூடாது. இந்த ஆட்சியின் கடிவாளத்தை திமுக, அதிமுகவிடம்தான் கொடுத்துள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக வைகோ தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சியில் தீப்பெட்டி சின்னத்தில் அவரது மகன் துரை வைகோ நின்றபோது, அதே திமுக செலவு செய்துதான் வெற்றி பெற்றார் என்பதை அவர் உணர வேண்டும்.
காங்கிரஸ் வேண்டுமானால் நம்முடன் இருக்கலாம். ஆனால் மற்ற கட்சிகள் வெளியேறினால் ஆட்சி போய்விடும் என்ற பயம் விஜய்க்கும், அவரைச் சுற்றி இருப்போருக்கும் இருக்கிறது.
அமமுகவின் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கட்சி எம்எல்ஏவிடம் கடிதம் பெற்று ஆளுநரிடம் கொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. தேவைப்படும்போது அதை கையில் எடுப்போம். அதில் முதல் குற்றவாளியாக விஜய் இருப்பார் என்றார்.
இக்கூட்டத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.