டிடிவி தினகரன்

 
தமிழகம்

செஞ்சியில் சிறுமி மாயமான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற தினகரன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டு, நடுப்பட்டு பகுதியில் கடந்த 11-ம் தேதி மாயமான 7 வயது சிறுமியைக் காவல்துறையினரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் தேடியும் சிறிய துப்புகூட கிடைக்காததால், காவல் துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது. தவெக அரசால், தமிழகக் காவல்துறை படிப்படியாகச் செயலிழந்து வருகிறது.

ஏற்கெனவே, விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகி பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் என தமிழகத்தில் சிறுமிகள் தொடர்பான கடத்தல் மற்றும் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. இவற்றின் பின்னணியில் ஏதேனும் கும்பல்கள் செயல்படுகின்றனவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனவே, சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையில் தமிழகக் காவல்துறை திணறி வருவதாலும், அடுத்தடுத்து சிறுமிகள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாலும், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT