சென்னை: ‘தர்மேந்திர பிரதானின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் என்பது, நாட்டின் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தனிப்பட்ட பதவியை விட தேச நலனையே உயர்வாகக் கருதி எடுக்கப்பட்ட உயர்ந்த அரசியல் முடிவு’ என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் என்பது, போராட்டக்காரர்கள் கூறுவது போல நீட் எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி அல்ல. மாறாக, நாட்டின் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பொறுப்புணர்வை உயர்த்திக் காட்டவும், தனிப்பட்ட பதவியை விட தேச நலனையே உயர்வாகக் கருதி எடுக்கப்பட்ட ஓர் உயர்ந்த அரசியல் முடிவாக இதை பார்க்க வேண்டும்.
இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு காலங்களில் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் போன்ற காரணங்களால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், மறுதேர்வுகள் நடத்தப்பட்டும் உள்ளன. அத்தகைய சூழல்களில், மாணவர்களின் உண்மையான உழைப்பே பாதுகாக்கப்பட்டது.
அதேபோல, நீட் தேர்விலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு பாதிக்கப்படாமல் மறுதேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், நீட் விவகாரத்தை மையமாகக் கொண்டு சில அரசியல் மற்றும் தேச விரோத நோக்கங்களுடன் செயல்பட்ட சக்திகள், மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டி, இந்தியாவின் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க முயன்றன.
கல்வியை அரசியலாக்கும் இத்தகைய முயற்சிகள் எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயப்பதில்லை. தர்மேந்திர பிரதானின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களில் சில.
• தேசிய கல்விக் கொள்கை 2020 – கட்டமைப்பு சீர்திருத்தம்
3 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்காக பழைய 10+2 கல்வி முறையை மாற்றி 5+3+3+4 கல்வி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பக் கல்வியில் (3–8 வயது) அடிப்படைத் திறன்கள் மற்றும் அனுபவ அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
• பிஎம் ஸ்ரீ பள்ளிகள். 13,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களுடன் மேம்படுத்தப்பட்டன. மாணவர்கள் இடைநிறுத்திய கல்வியை பின்னர் மீண்டும் தொடரவும், சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை நெகிழ்வான முறையில் முடிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
உலகத் தர பல்கலைக்கழகங்கள்: டீகின் (Deakin), வொல்லொங்கொங் (Wollongong) போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் தொடங்க அனுமதிக்கப்பட்டன. அதேசமயம், ஐஐடி வளாகங்கள் வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தப்பட்டன.
மொழி அணுகல்: பி.டெக் பாடப்புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி 12 இந்திய மொழிகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நுழைவுத் தேர்வுகள்: நீட், ஜேஇஇ, க்யூட் ஆகியவை 12 இந்திய மொழிகளிலும், சிடிஇடி 19 மொழிகளிலும் நடத்தப்படத் தொடங்கியது.
இந்திய மொழி விழா: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 முதல் 11 வரை "இந்திய மொழி உற்சவ்" கொண்டாடப்படத் தொடங்கியது.
கோடைக்கால முகாம்கள்: கூடுதலாக ஒரு இந்திய மொழியைக் கற்பதற்கான இயக்கத்தில் 4.7 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் இணைக்கப்பட்டனர்.
நிறுவன ஆதரவு: யுஜிசி, சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றின் கீழ் உள்ள தேர்வுகளை உள்ளூர் மொழிகளில் எழுத அனுமதி வழங்கப்பட்டது.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தேர்வுத் தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் கொள்கை பின்பற்றப்பட்டது.
ஒரு தலைவரின் மதிப்பு அவர் பதவியில் இருப்பதாலல்ல; அவர் நாட்டிற்காக செய்த சீர்திருத்தங்களாலும், எதிர்கால தலைமுறைக்காக உருவாக்கிய கொள்கைகளாலும் அளவிடப்படுகிறது. அந்த வகையில், தர்மேந்திர பிரதானின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு.’ எனத் தெரிவித்துள்ளார்.