சென்னை: டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ், அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாக நாள்தோறும் வெளியாகும் தகவல்கள் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கமாக ஒருங்கிணைத்து, ரசிகர்களை பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை தனுஷ் தீவிரப்படுத்தி உள்ளார்.
முதல்வர் விஜய் தற்போது அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனுஷின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனுஷ் ரசிகர் மன்றத்தினர் சமூக நலப் பணிகளுக்காகப் பயன்படுத்தி வரும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடி, அரசியல் கட்சியின் கொடியைப் போன்று இருப்பதாக அண்மையில் விவாதம் எழுந்தது. இருப்பினும், இந்தக் கொடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவதாக ரசிகர் மன்றத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தனுஷின் பெயரில் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து, தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தனுஷ் நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ளார். அங்கு 2 நாட்களாக முகாமிட்டிருக்கும் அவர் சில முன்னணி அரசியல் வியூக நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைச் சந்தித்து, தமிழக அரசியல் களத்தில் கால் பதிப்பதற்கான சாத்தியக்கூறுகள், கட்சியை கட்டமைக்கும் முறை மற்றும் எதிர்காலத் தேர்தல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், சில தேசியக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் அல்லது சட்ட வல்லுநர்களைச் சந்தித்து, அகில இந்திய அளவிலான அரசியல் சூழ்நிலைகள் மற்றும் கட்சித் தொடக்கத்துக்கான வழிகாட்டுதல்களையும் இந்த சந்திப்பின் போது பெறலாம் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே, தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ரசிகர்களுடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக்கொள்வதுடன், இயக்கத்தின் அடுத்தகட்டச் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தொடர்பான அறிவிப்பு ஏதே னும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.