திண்டுக்கல்: திருக்கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் நாளை (நவ.24) பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ.18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, தங்க சப்பரத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
திருக்கார்த்திகையை முன்னிட்டு, நாளை (நவ.24) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.
பிற்பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4.45 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்மயில் வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மலைக்கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும்.
இதையொட்டி, பிற்பகல் 2 மணிக்கு மேல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதியில்லை. மாலை 6.30 மணிக்கு மேல் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், நாளை (நவ.24) ஒரு நாள் மட்டும் தங்கரதப் புறப்பாடும் நடைபெறாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.