திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், விடுமுறை தினங்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதன்படி, நேற்று வார விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. பக்தர்கள் வருகை படிப்படியாக அதிகரித்து கோயிலில் கூட்டம் அலைமோதியது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அபிஷேகத்தில், சென்னையைச் சேர்ந்த ரவிசங்கர் (68) என்பவர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மயக்கமடைந்தார். அவரை மீட்டு கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் அபிஷேகத்துக்கு
பக்தர்களை கூடுதலாக அனுமதிப்பதை தடுக்கவும், கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.