சென்னை: மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை, திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் ரூ.303 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூர் தொகுதியில், தண்டையார்பேட்டை மண்டலம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகில் ரூ.3 கோடியில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது.
அதன் வரைபடம் மற்றும் முதற்கட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று ஆய்வு செய்து, கூடைப்பந்து, கிரிக்கெட் வலைப்பயிற்சி, கால்பந்து உள்ளிட்ட மைதானங்களை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
வியாசர்பாடி கால்வாயில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவரை உயர்த்திக் கட்டும் பணி மற்றும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து முல்லை நகர் பகுதியில் கேப்டன் காட்டன் கால்வாயில் ரூ.9.20 கோடியில் வெள்ளத் தடுப்புச் சுவர் புதிதாக கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு, விரைந்து பணிகளைத் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முல்லை நகர் மேம்பாலம், மயானபூமி, கூட்ஸ் ஷெட் சாலை- வடக்கு ஆகிய பகுதிகளில் பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கும் விதமாக, மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.3.06 கோடியில் மொத்தம் 9,44,600 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 நீர்த்தேக்கத் தொட்டிகள், 400 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் 45-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலை, கணேசபுரம் சாலை, சுந்தரம் நகர் பிரதான சாலைகளின் வழியாககூட்ஸ் ஷெட் குளத்தில் இணைக்கும் வகையில் ரூ.13.32 கோடியில் கட்டப்பட்டு வரும் மழைநீர்வடிகால் பணியையும், கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணியையும் பார்வையிட்டார்.
திருவிகநகர் மண்டலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூட கட்டிடப் பணியையும் பார்வையிட்டார்.
பின்னர், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பேசின் மேம்பாலம் அருகில் உள்ள நவீன மாடுகள் காப்பகத்தைப் பார்வையிட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைக் காப்பகத்தில் பராமரிக்கவும், கால்நடைகள் வளர்ப்போருக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.