தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் செயற்கை நுண்ணறிவுத் துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநாத்
தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகர் நாத், சென்னை அண்ணாநகர் மேற்கில் வசித்து வருகிறார். லயோலா கல்லூரியில் படித்தபோது, இவருக்கும் விஜய்க்கும் இடையே நட்பு உருவானது. தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றார்.
கமலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர். முதுகலை ஆங்கிலம் பயின்ற இவர், தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். அவினாசி தொகுதியில் வெற்றி பெற்றார். கணவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.
விஜயலட்சுமி
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தைச் சேர்ந்தவர். பிளஸ் 2 வரை படித்து, சுயதொழில் செய்து வந்தார். தவெக மாநில துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ரஞ்சித்குமார்
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர். பி.ஏ பட்டதாரி. ஓபிஎஸ் அணி மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அதிமுகவில் பணியாற்றியவர். காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
வினோத்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர். தற்போது கும்பகோணத்தில் சிறிய அளவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கும்பகோணம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ராஜீவ்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மருத்துவர். கடந்த 2016 முதல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். 'விஜய் மக்கள் இயக்கத்தில்' இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தார். திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராஜ்குமார்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் (டிப்ளமோ) முடித்துவிட்டு, ரியல் எஸ்டேட் தொழிலதிபராக உள்ளார். புஸ்ஸி ஆனந்தின் தீவிர விசுவாசி. கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்.
காந்திராஜ்
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையைச் சேர்ந்தவர். பி.ஏ. படிப்பை பாதியில் நிறுத்திய இவர், கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஏற்கெனவே கவுன்சிலராக உள்ளார். அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மதன்ராஜா
கோவில்பட்டி திட்டக்குளத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. கோவையில் ‘இண்டீரியர் டிசைனிங்’ நிறுவனத்தை நடத்தி வருகிறார். விஜய் நற்பணி மன்றத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஜெகதீஸ்வரி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்சி. பட்டதாரி. ஊடகத்துறையிலும் அனுபவம் கொண்டவர். விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மகளிர் அணித் தலைவராக பணியாற்றியவர். ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ராஜேஷ்குமார்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர். இத்தொகுதியிலிருந்து தொடர்ந்து 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டம் படித்துள்ளார். முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். கிள்ளியூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.
விஜய் பாலாஜி
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர். பி.காம் பட்டதாரியான இவர், பேன்சி கடை நடத்தி வருகிறார். தவெக-வின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
லோகேஷ் தமிழ்ச்செல்வன்
சேலம் மாவட்டம் தாதகாபட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் அதிமுக பேரவைத் தலைவர் தனபாலின் மகன். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் மற்றும் டெல்லியில் எம்.பி.ஏ படித்துள்ளார். ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
தமிழன் பார்த்திபன்
சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர். பிளஸ் 2 படித்துள் ளார். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மொபைல் ஷோரூம் நடத்துகிறார். விஜய்யின் சில படங்களுக்கு சேலம் மாவட்ட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். சேலம் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
ரமேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்த முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி. சமையல் தொழி லாளியின் மகன். தவெக செய்தித் தொடர்பாளராகவும், பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உயர்ந்தார். ரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
விஸ்வநாதன்
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை சேர்ந்தவர். தேசிய மற்றும் மாநில அளவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பி.ஏ. பட்டதாரி. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவின் தீவிர ஆதரவாளர். மேலூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
குமார்
சென்னை அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர். பெங்களூரு ஐஐஎம்-ல் 'பிசினஸ் லீடர்ஷிப்' படிப்பு முடித்த சிவில் இன்ஜினீயர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தென்னரசு
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் சிறுணைப்பெருகல் பகுதியைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு படித்துள்ள இவர், கமிஷன் ஏஜெண்டாக பணியாற்றினார். தவெக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர். பெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
சம்பத்குமார்
கோவை கணபதியைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. (தொலைதூரக் கல்வி) முடித்து விட்டு, அப்பகுதியில் நெய் வியாபாரம் செய்து வருகிறார். தவெகவின் கோவை மாவட்ட செயலாளராக உள்ளார். கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
முகமது பர்வேஸ்
புதுக்கோட்டை மாவட்டம் ஏ.எம்.ஏ. நகரைச் சேர்ந்தவர். சட்டப் படிப்பு முடித்துள்ளார். அச்சுத் தொழில் செய்து வருகிறார். ஏற்கெனவே கவுன்சிலராகவும், புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றார்.
சரத்குமார்
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரைச் சேர்ந்தவர். பிபிஏ பட்டதாரியான இவர், கட்டுமானத் துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். தவெக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மரிய வில்சன்
காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. பட்டமும், 'மேலாண்மை அறிவியல்' துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்வியாளர் மற்றும் அரசியல் வியூகவாதி. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
விக்னேஷ்
கோவையைச் சேர்ந்தவர். பி.எஸ்சி கணினி அறிவியல் பட்டதாரி. சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். கோவை தெற்கு மாவட்டச் செயலாளர். கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.