கோவை: கோவை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6-ல் தவெகவும், 3-ல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியும், ஒரேயொரு தொகுதியில் அதிமுகவும் வென்றன.
கோவை வடக்கு தொகுதியில் 29 பேர் போட்டியிட்ட நிலையில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவரான வானதி சீனிவாசன் தவெக அலையில் சிக்கி 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
திமுக வேட்பாளர் செந்தமிழ்செல்வன் 2-ம் இடம் பிடித்தார். வானதி சீனிவாசன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவை அழைத்து வந்து, மனுதாக்கலுடன் பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக தொடங்கினார்.
கோவை வடக்கு தொகுதி வானதி சீனிவாசனுக்கா அல்லது அண்ணாமலைக்கா என்ற விவாதங்கள் பாஜகவுக்குள் எழுந்த நிலையில், இரு தரப்பிலும் கடும் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
கட்சித் தலைமையின் முடிவை மதிப்பதாக கூறி வானதி சீனிவாசனுக்கு பிரச்சாரத்தை தொடங்கினார் அண்ணாமலை. தொடர்ந்து வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா கோவைக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்துள்ள ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் உள்ளரங்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மகன்கள் மற்றும் கணவர் என சகல தரப்பிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் இந்த தேர்தலில் அவர் வெற்றிபெறவில்லை. 42,778 வாக்குகள் பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதே தொகுதியில் விஜய் ரசிகராக இருந்து கட்சியில் வாய்ப்பு பெற்ற சம்பத்குமார் 21,992 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் செந்தமிழ் செல்வனை வீழ்த்தினார்.
பாஜகவினர் கூறும்போது, “வானதி சீனிவாசன் கடந்த ஓராண்டாகவே வடக்கு தொகுதியை கண்காணித்து வேலை செய்து வந்த நிலையிலும் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்கு புதுவரவான விஜய் அலை அடித்ததுதான் வானதி வெற்றிபெறாததற்கு காரணமே தவிர, உள்கட்சி பிரச்சினை எதுவும் கிடையாது. அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்தனர்” என்றனர்.