சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், நாராயணபுரம், வேளச்சேரி ஏரிகளில் தூர்வாரும் பணியை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஆறு, ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் நேரில் தொடங்கி வைத்து, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் வேளச்சேரி ஏரிகளில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். கீழ்க்கட்டளை, பல்லாவரம் மற்றும் பள்ளிக்கரணை ஏரிகளின் உபரிநீர் இந்த ஏரி வழியாகவே சதுப்புநிலத்தை அடைகிறது.
நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும், சூழலியலை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இப்பணியில், ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்படுகின்றன.
இதன்மூலம், பருவமழைக் காலங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வேளச்சேரி ஏரியைச் சீரமைக்கும் பணியையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
நகரமயமாக்கல் காரணமாகச் சுருங்கிவிட்ட போதிலும், எஞ்சியுள்ள 22.40 ஹெக்டேர் பரப்பளவிலான இந்த ஏரி அப்பகுதியின் நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படவுள்ளன.
இதன்மூலம், ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு, மழைநீர் தங்குதடையின்றிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 27-ம் தேதி கோயம்பேடு கூவம் நதி மற்றும் ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களிலும், நேற்றுமுன்தினம் மணப்பாக்கம் அடையாறு ஆறு மற்றும் சோழிங்கநல்லூர் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய இடங்களிலும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளுக்கு உத்தரவு
ஆய்வின் போது, அமைச்சர் என்.ஆனந்த், “பருவமழை தொடங்கும் முன்னரே அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.