சென்னை: சென்னையில் ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிப்.28 அன்று சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ராமா தெரு சென்னை நடுநிலைப் பள்ளியில் 3.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினைப் திறந்து வைத்து, கரும்பலகையில் அமைப்பட்டுள்ள மின்னணு தொடு திரையை இயக்கி பார்வையிட்டார்.
மேலும், பள்ளியில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கல்வி பயில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதையும், கண் கவர் வண்ணங்கள் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளதையும், குழந்தைகளை கவரும் வகையில் மேஜை, டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம் பேட்டை மண்டலம், வார்டு- 113, நூர் வீராசாமி தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார மையத்தினையும், வார்டு- 112 பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையையும் திறந்து வைத்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமைந்தகரை சென்னை நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினைப் திறந்து வைத்தார். பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலையில் 3.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சமூக நீதி பூங்காவினைப் துணை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், டாக்டர் நா.எழிலன், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.