சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் கண்டறியப்பட்டதால், மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருவதால், டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட மாநிலம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 253 பேர்: கடந்த 18-ம் தேதி ஒரே நாளில் சென்னையில் சுமார் 100 பேர் என தமிழகம் முழுவதும் மொத்தம் 253 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 16,830 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 23,407 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர்.
வளாகத்தில் கொசுவை ஒழிக்க புகை அடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ் குமார் சமீபத்தில் உயிரிழந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியானதால், சக மாணவர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில், ‘மாணவர் உயிரிழப்புக்கு டெங்கு காரணம் இல்லை. ‘ஸ்க்ரப்’ எனப்படும் தொற்றுநோயால் உயிரிழந்தார்’ என்று மருத்துவமனை நிர்வாகம், பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
‘ஸ்க்ரப் டைபஸ்’ (Scrub Typhus) என்பது பூச்சிக் கடியால் பரவும் ஒரு பாக்டீரியா தொற்றுநோய் ஆகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் உயிரிழக்க இந்த நோய்தான் காரணம் என கூறப்பட்டதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாநகராட்சி மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் 100 பேர் நேற்று தீவிர தூய்மைப் பணி மேற்கொண்டனர். இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். கடந்த சில நாட்களில் இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக வளாகத்தில் உள்ள மருத்துவமனை மருத் துவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான விவரங்களையும் மாநகராட்சிக்கு தினமும் வழங்கி வந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களை தொடர்ந்து கண்காணித்து வரு கிறோம். மாணவர் ஹரிஷ் குமார் பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றதால், அவரை கண்காணிக்க இயல வில்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போதே, வளாகத்தில் புதர்கள், நீர் தேங்கும் வகையில் கழிவு சேர விடக் கூடாது என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம்கூட பல்கலைக்கழகத்துக்கு கடிதம் கொடுத்தோம்.
பல்கலை.க்கு அறிவுறுத்தல்: அண்ணா பல்கலைக்கழக வளாகம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு முறையான பராமரிப்பு இல்லை. டெங்கு கொசு அதிகம் உற்பத்தியாகும் விதமாக ஏராளமான பிளாஸ்டிக் உறைகள், ஓட்டல் உணவுகளை பார்சல் செய்யும் பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு கிடக்கின்றன. அவற்றை முறையாக அகற்ற அறிவுறுத்தி உள்ளோம். ஒரு நாள் பணியாக மாநகராட்சிப் பணியாளர்களையும் ஈடுபடுத்தி வளாகத்தை தூய்மைப்படுத்தி உள்ளோம். வளாகத்தை முறையாகப் பராமரிக்குமாறு நிர்வாகத்தை அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
உயிரிழப்பில் சந்தேகம்: விடுதி மாணவர்கள் கூறும் போது, ‘‘யாரும் இங்கு இலவசமாகத் தங்கவில்லை. தங்குவதற்கும், உண்பதற்கும் உரிய கட்டணம் செலுத்து கிறோம். எனவே, வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு. அந்த பொறுப்பில் இருந்து பல்கலைக்கழகம் தவறி உள்ளது. அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுவதுபோல ‘ஸ்க்ரப்’ என்ற நோய், இங்கு வேறு யாருக்கும் இல்லை. அந்த பூச்சிகள் இருப்பதற்கான தடயங்களும் வளாகத்தில் இல்லை. அந்த நோயால்தான் மாணவர் உயிரிழந்தாரா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.
தமிழகம் முழுவதும் விடுதி மாணவர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், வளாகத்தில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சுகாதாரத் துறை சார்பில் முகாம் அமைத்து, மாணவர் களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டபோது, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுதி மாணவர்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ள 70 பேர், டெங்கு அறிகுறிகள் காணப்படும் 190-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவில்தான் என்ன மாதிரியான காய்ச்சல் என்பது தெரியும். விடுதியில்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதிக காய்ச்சல் உள்ள சில மாணவர்களுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தபோது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சொந்த ஊர் சென்றிருப்பதும் தெரியவந்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஏராளமான மாணவர்கள் பருவகால காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாணவர் ஹரிஷ் குமார் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாமல், சுயமாக மருந்து வாங்கி உட்கொண்டு காலம் தாழ்த்தியுள்ளார். உயிரிழப்புக்கு அதுதான் காரணம். எனவே, மாணவர்கள் உட்பட அனைவரும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.