புதுச்சேரி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் துறையை கண்டித்தும், வாக்கு திருட்டை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ராகுல் காந்தி கடந்த ஒரு வருடமாக இந்திய தேர்தல் துறை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) அறிவித்த பிறகு, இதில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது; தகுதியானவர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல 3 மாத காலம் பாதை யாத்திரை சென்றார். ஆனால், இப்போது ஆதாரப்பூர்வமாக வாக்குத் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 கோடி வாக்காளர்கள் இந்த வக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் மூலம் நீக்கப்பட்டுள்ளனர். இது மிகப் பெரிய ஜனநாயக படுகொலை. கோவா மாநிலத்தல் 97 பேரை நீதிமன்ற உத்தரவை மீறி நீக்கியுள்ளனர். இப்படி சர்வாதிகார போக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடந்து கொண்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் இயக்கம் இணைந்து சதி செய்துள்ளனர்.
தென் மாநிலங்களை அவர்கள் தொடவில்லை. தமிழகத்தில் அவர்கள் பலவீனம் என்று தெரியும். புதுச்சேரியில் பெரிய அளவில் பார்க்கவில்லை. கேரளத்தில் அவர்களால் செய்ய முடியவில்லை. கர்நாடகாவில் முயற்சித்தார்கள் முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் 3-ல் 2 பங்கு இடங்களை பெறுகின்றோம். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைகின்றோம்.
இதேபோல் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று பேசப்பட்டது. ஆனால் அங்கேயும் நாங்கள் தோல்வியை தழுவினோம். பிஹாரில் எங்கள் கூட்டணி வரும் என்று சொன்னார்கள், ஆனால் வரவில்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இதனால் தான் பின்னடைவை சந்தித்தார். இப்படி சர்வாதிகாரத்தனமாக அவர் நடந்துள்ளார். இதற்கு தீர்வு காண வேண்டுமென்றால் ஞானேஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் ஜனாநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மக்களின் வாக்கு திருடப்படுகிறது. இன்னும் 3 மாதங்களில் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் ஆகியோரின் தந்திரங்கள் வெளியே வரும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆகவே, ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்று நாராயணசாமி தெரிவித்தார்.