சென்னை: தமிழகத்துக்கு 9.91 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழகத்தின் உறுப்பினர் மற்றும் நீர்வளத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றுத் தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்தார்.
கூட்டத்தில் பேசிய தமிழக உறுப்பினர், மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 40.742 டிஎம்சியாக உள்ளதாகத் தெரிவித்தார். தற்போது, அணையில் இருந்து குடிநீர் தேவை, தொழிற்சாலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, விநாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-26), ஜூன் 1 முதல் மே 24-ம் தேதி வரை பில்லி குண்டுலுவில், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு 176.685 டிஎம்சி ஆகும். ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரையும் சேர்த்து மொத்தம் 329.166 டிஎம்சி நீர் தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய கர்நாடக உறுப்பினர், தாங்கள் வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். எனினும், கர்நாடகாவின் இந்த வாதத்தை தமிழக உறுப்பினர் சத்யபிரதா சாகு எதிர்த்தார்.
கர்நாடகம் தனது நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாமல், வேறு வழியின்றி வெளியேற்றிய உபரி நீரினைத் தங்களுக்கு சாதகமாக சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அதனைத் தமிழகத்துக்கு வழங்கிய கணக்கில் சேர்க்க இயலாது என்றும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 26-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதாலும், வரும் ஜூன் மாதத்துக்கு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9.91 டிஎம்சி நீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் காவிரி நீர்மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.