தமிழகம்

‘காவல் துறையை சீர்திருத்த உயர்நிலைக் குழு அமைப்பீர்’ - முதல்வருக்கு ஏஎன்எஸ் பிரசாத் கோரிக்கை

துரை விஜயராஜ்

சென்னை: “தமிழக காவல்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும்” என முதல்வர் விஜய்க்கு பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “தேனி சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதேபோன்ற அணுகுமுறை தமிழகக் காவல்துறையிலும் அவசியமாகியுள்ளது.

ஏற்கெனவே இதுதொடர்பாக இரண்டு விரிவான மனுக்களை அளித்துள்ளேன். அவற்றையும் தற்போதைய மனுவுடன் இணைத்துப் பரிசீலிக்க வேண்டும். சிறைச்சாலைகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைப் போன்றே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது நேர்மையான மூத்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தலைமையில், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.

இக்குழு காவல்துறையின் நிர்வாகம், செயல்பாடுகள், ஒழுங்குமுறை, பொறுப்புடைமை, ஊதிய மறுசீரமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க வேண்டும். காவல்துறையினர் தொடர்பான வழக்குகளுக்குச் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில், சட்டப்படி பொறுப்புடைமை உறுதி செய்யப்படுவதுடன், நேர்மையாகவும் நல்லெண்ணத்துடனும் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகுந்த பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய சீர்திருத்தங்கள் தமிழக காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும். எனவே, இந்த கோரிக்கையை முதல்வர் விரைந்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT