சென்னை: ‘டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், தமிழகத்தின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி நடந்த வெடிகுண்டுச் சதியில் தொடர்புடைய 6 பேரை, திருப்பூர் பகுதியில் பதுங்கியிருந்தபோது, மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பாவிகளை கொல்ல சதி செய்த பயங்கரவாதிகள் தமிழகத்தில் பதுங்கி இருந்தார்கள் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல் ஆளும் திமுக கூட்டணியால் எழுகிறது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுவும் சட்டவிரோத வங்கதேச ஊடுறுவல்காரர்கள் தமிழகத்தில் தான் அதிக அளவில் தலைமறைவாக வாழ்கிறார்கள். இதற்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வங்கதேசக்காரர்கள் கைது செய்யப்பட்டாலும் அரசியல் அழுத்தம் காரணமாக காவல்து றை தொடர் விசாரணை செய்யாமல் வழக்கை நீர்த்துப்போக செய்கின்றன.
மேலும் மத்திய புலனாய்வு துறையினர் மூலமே சதிகார பயங்கரவாதிகள் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் புலனாய்வுத் துறை என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
தொழில் நகரங்களில் பாதுகாப்பற்ற சூழல் உருவாவது மாநிலத்தின் நிம்மதியை, வளர்ச்சியை பெரிதும் பாதித்துவிடும் என்பதை மாநில அரசு புரிந்து கொண்டு கொங்கு மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் மாநில அரசு இடம் தரக் கூடாது. மாநில அரசு, பயங்கரவாதிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.