தமிழகம்

புதுவையில் காங்கிரஸை வலுப்படுத்த டெல்லியில் ஆலோசனை: வட்டார, கிளை கமிட்டிகளை சீரமைக்க முடிவு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸை வலுப்படுத்த டெல்லியில் ஆலோசனை நடந்ததில், வட்டார, கிளை கமிட்டிகளை சீரமைக்க முடிவு செய்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் ‘நட்பு போட்டி’ முறையால் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவே போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது.

மாநிலத் தலைவர் எம்.பி வைத்திலிங்கத்துக்கு எதிராக ஒரு தரப்பினர் போர்கொடி உயர்த்தி உள்ளனர். படுதோல்விக்கு பொறுப்பேற்று வைத்திலிங்கம் பதவி விலக வேண்டும் என்றும் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். வைத்திலிங்கம் ராஜினாமா கடிதம் அனுப்பியும் கட்சித் தலைமை முடிவு ஏதும் எடுக்கவில்லை.

இந்நிலையில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சீரமைக்கவும், அமைப்பை பலப்படுத்தவும் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அதில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்துள்ளார். புதுவை பொறுப்பாளர் குலாம் அகமது மீர் முன்னிலை வகித்துள்ளார். இக்கூட்டத்தில், மாநில தலைவர் வைத்திலிங்கம், கார்த்திகேயன் எம்எல்ஏ., செயலாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.

இதுபற்றி கட்சித் தரப்பில், “டெல்லியில் நடந்த கூட்டத்தில் வட்டார, கிளை கமிட்டிகளை சீரமைத்து, தொண்டர்களுக்கும் களப் பணியாளர்களுக்கும் அதிகாரம் அளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில நிர்வாகிகளுக்கும், தொகுதி மற்றும் கிளை அளவிலான பொறுப்பாளர்களுக்கும் இடையே தடையற்ற தொடர்பையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த சிறப்பு வழிமுறைகளை வகுக்க முடிவு செய்யப்பட்டது.

வரவிருக்கும் அரசியல் களங்கள், உள்ளாட்சி மற்றும் பொது தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சி அமைப்பை இப்போதிருந்தே தயார் நிலையில் வைப்பது குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டன." என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT