படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: இந்தியா செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தும் நாடாக இல்லாமல் அதை உருவாக்கும் நாடாக இருக்க வேண்டும் என விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 41-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. மொத்தம் 11,276 பேர் பட்டம் பெற்றனர். விழாவுக்குத் தலைமை தாங்கிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும் போது, "இந்தியாவில் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் இதை 50 % உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ கல்வியில் பின் தங்கியுள்ளோம். வெளிநாடுகளை விட இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான செலவு அதிகமாக உள்ளது" என்றார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசும் போது, “பட்டம் பெறும் நீங்கள் உங்கள் நகரின் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டும். இந்தியா ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தும் நாடாக இல்லாமல் அதை உருவாக்கும் நாடாக இருக்க வேண்டும்" என்றார்.
விழாவில், டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கி மற்றும் நிதித்துறை சேவைக்கான தலைமை தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் பாபு உன்னி கிருஷ்ணன் கவுரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். விழாவில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பால சுந்தரம், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டம் பெற்ற முதல்வரின் மகன்
விஐடி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தா, விஐடியில் கணினி அறிவியல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார். அதை மேடையின் கீழே அமர்ந்தபடி ரேகா குப்தா குடும்பத்தினர் ரசித்தனர். பின்னர், பெற்றோரின் காலில் விழுந்து நிகுஞ்ச் குப்தா ஆசி பெற்றார்.