சென்னை: நேர்காணல் இல்லாத பதவிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றோர் பட்டியலை வெளியிட காலதாமதம் ஏற்பட்டிருப்பதால், டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உதவி இன்ஜினியர், வேளாண் விரிவாக்க அலுவலர், உதவி இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்), மீன்வள ஆய்வாளர், இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உட்பட 51 வகையான பதவிகளில் 1,033 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து பிப்.26-ம் தேதி இணையவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியானது.
வழக்கமாக இணையவழி சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் வெளியானதும் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, நேரடி அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டுவிடும்.
ஆனால், நேர்காணல் இல்லாத பதவிகளுக்காக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட்டு 3 வாரங்கள் ஆகியும் இன்னும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்படவில்லை.
இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் யாரேனும் உரிய சான்றிதழ்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருந்தாலும், குறைபாடான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு இன்னும் கால அவகாசம் ஏதும் தரப்படவில்லை.
இதனால், மதிப்பெண் தரவரிசையில் முன்னிலையில் இருந்து பணி வாய்ப்பு பெறும் நிலையில் உள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் வெளியிட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வை நடத்தி பணிக்கு தேர்வானோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிட வேண்டும் என்று அத்தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.