மேயர் பிரியா | கோப்புப்படம் 
தமிழகம்

“ஏஐ மூலம் என்னை அவதூறாகச் சித்தரித்து வீடியோ...” - சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: “தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னை அவதூறாகச் சித்தரிக்கிறார்கள். இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என சென்னை மேயர் பிரியா குற்றம்ச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேயர் பிரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தவெக அரசு மே மாதம் முதலே மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்து செய்திருக்கிறது. சில பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கவில்லை. இது குறித்து திமுக சார்பில் பல்வேறு இடங்களில் எங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்.

எனவே, இன்றைக்கு விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், சமூக வலைத்தளங்களில் என்னைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்கள். தவெக அரசைக் கண்டித்துப் பேசினாலும், அந்த அரசில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்தாலும், அதற்கு மறுநாளே என்னைத் தவறாகச் சித்தரித்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திமுகவில் இருக்கக் கூடியவர்களுடன் என்னைத் தவறாகத் தொடர்புபடுத்தி வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இந்த மாதிரியான வீடியோக்கள் பொது மக்களிடையே பரவும்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், மேயராகவும் பெண்ணாகவும் நான் பலமுறை இதுகுறித்து பேசியும், இன்றுவரை முதல்வர் மௌனம் காத்து வருகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT