கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி: “என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகிறார்கள்” என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது குறித்து கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியது: “நான் அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
எங்களுடைய ஆட்சியும், என்னையும் குறை கூறும் நோக்கிலே அவதூறு பரப்பி வருகிறார்கள். என் தலைவர் முதல்வர் சொல்வதுபோல் என் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தேவையில்லை” என்றார்.
மேலும், நீங்கள் ஆட்சியருக்கு எந்த குறுஞ்செய்தியும் அனுப்பியதில்லையா என்ற கேள்விக்கு, “சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற தகவல்களை நான் பகிர்ந்ததில்லை. மக்கள் அளிக்கும் மனு தொடர்பான தகவல்கள் மட்டுமே அவரிடம் பரிமாறி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “என் மீது பொய்யான தகவலை பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.