புதுடெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நியமிக்கப்பட்ட குழுவுக்கு கோயில் நிர்வாகம் முறையான அனுமதியை வழங்காததே தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்குக் காரணம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் இருப்பார் என தெரிவித்த நீதிமன்றம், தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், ‘நவ.20 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் தீபத்தூணில் விளக்கேற்றலாம் என்றும், இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தீபம் ஏற்றுவதற்கான நேரம், தீபம் ஏற்றுவதற்கான 10 பேர் கொண்ட குழு, பாதுகாப்பு ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் அளித்தது. எனினும், தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கான குழுவுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. 10 பேர் கொண்ட குழுவுக்கு அனுமதி கோரி நவ.22 அன்று கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவை அணுகியதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
நவ.24 அன்று, அறங்காவலர் குழுவின் அனுமதி கிடைத்த பிறகு, அதற்கான முன்னேற்பாடுகளும், விளக்கேற்றும் நிகழ்வும் தொடங்கும் என்று செயல் அலுவலர் மூலம் மீண்டும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனுமதி கோரி மாலை 3.47 மணிக்கு நான் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினேன். மாலை 5.03 மணிக்கு மீணடும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினேன். அதில், அங்கீகரிக்கப்பட்ட குழுவைக் கொண்டு உடனடியாக தீபம் ஏற்றுமாறும், ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அது குறித்து தன்னிடம் அல்லது காவல் ஆணையரிடம் தெரிவிக்குமாறும் கோயில் செயல் அலுவலருக்கும், தேவஸ்தானத்துக்கும் அறிவுறுத்தி இருந்தேன்.
இருப்பினும், இரவு 8.30 மணியளவில் அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில், அறங்காவலர் குழுவானது, தீப மண்டபத்தில் (உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வழக்கமான இடம்) மகா தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாலை 6 மணியளவில் அங்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தகுதியான நபர்கள் குறித்து தேவஸ்தானம் எந்த தகவலும் அளிக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு குழுவை மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த நான் தொடர்ந்து நல்லெண்ணத்துடன் செயல்பட்டேன். வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மன்னிப்பு கோருகிறேன். மேலும், இது குறிதது கூடுதல் ஆவணங்களுடன் கூடிய துணை அறிக்கையை தாக்கல் செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் வி. ராமசுப்பு என்பவர், தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.