மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தரிசிக்க அடிவாரத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மெகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்த கோரிக்கைக்காக கடந்தாண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் உச்சிப்பிள்ளையார் கோயிலிலும், தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தாண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவ. 20-ல் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். வேறு ஆட்களை மலையில் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் திருப்பங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதில் பெரும் குழப்பம் நிலவியது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பலர் நேற்று அவசர மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். தவறினால் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைக்கு அதிகாரிகள் ஆளாக நேரிடும் என உத்தரவிட்டது.
இதையடுத்து தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தரிசிக்க திருப்பரங்குன்றத்தில் லட்சக்ணக்கானோர் திரண்டனர். அடிவாரத்தில் நின்று தீபத்தூணை பார்த்தபடி வணங்கியவாறு காத்திருந்தனர். சரியாக 6 மணிக்கு வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என மக்கள் நினைத்தனர். ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தீபத்தை தரிசிக்க அடிவாரத்தில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.