சென்னை: இந்திய ரயில்வேயில் மொத்தம் உள்ள 14.80 லட்சம் பணியாளர்கள் எண்ணிக்கையில், 2 சதவீதம் பணியாளர்களை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியாளர்கள் குறைக்கப்பட உள்ளனர். இது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று ரயில்வே ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுப்போக்குவரத்து அமைப்பாக, ரயில் போக்குவரத்து திகழ்கிறது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றது போன்ற காரணங்களால் ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான வழித்தடங்களில் 13,000 பயணிகள் ரயில்கள் உள்பட தினசரி 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இயக்கத்தில் லட்சக்கணக்கான பணியாளர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14 லட்சத்து 80 ஆயிரத்து 455 பணியாளர்களில் 2 சதவீதம், அதாவது, 29,608 பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்களும், சென்னை ஐ.சி.எஃப்-ல் 217 பணியிடங்களும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாதை, இரட்டை பாதை மற்றும் மின்மயமாக்களுடன் புதியபாதை அமைக்கப்படுகிறது. இப்பாதைகளில் வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்பட பல்வேறு நவீன சொகுசு ரயில்கள் இயக்குவது அதிகரிக்கிறது. இந்த ரயில்களை இயக்கவும், ரயில் பாதையை பராமரிக்கவும் அதிக பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், நிர்வாகச் செலவுகளை குறைக்கும் விதமாக, பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை ரயில்வே வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்போதுள்ள ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதோடு, ரயில்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடும் என்றும், இது பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஓய்வுபெற்ற ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறியதாவது: சிக்கன நடவடிக்கைக்காக இதை எடுத்துள்ளார்கள். இது சரியான நேரம் அல்ல. வந்தே பாரத் ரயில் உட்பட புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதிகமான சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
கூடுதல் பணியாளர்கள் தேவை 98 சதவீதம் அகலப்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இரட்டைப்பாதையை அதிகப்படுத்தியுள்ளனர். இப்பாதைகளை பராமரிக்க கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
எனவே, ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நேரத்தில் எண்ணிக்கையை குறைப்பதை ரயில்வே துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. இது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.