மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள். படம்: நா. தங்கரத்தினம்.

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்ற முடிவு

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) எஸ்.வைத்தியநாதன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பர்த்திபன் ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதையடுத்து நேற்று இரவே துணை ராணுவப்படை திருப்பரங்குன்றம் வந்தனர். இன்று காலை துணை ராணுவ வீரர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு துப்பாக்கியுடன் சென்று மலை முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதிகள் இன்று காலை மதுரை வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், துணை ராணுவப்படை கமாண்டர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அதில் மாலை 5 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தீபம் ஏற்றுவதற்கான பொருட்களுக்கான பூஜையில் பங்கேற்றனர். பின்னர் தீபம் ஏற்றுவதற்கான பொருட்கள் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே கொண்டுச் செல்லப்பட்டது. முன்னதாக தீபத்தூணை சுற்றி கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டது.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இன்று தான் கிடைத்தது. அதை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படும்.” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT