எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

தவெக அரசை கண்டித்து டிச. 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மு.சக்தி

சென்னை: மக்கள் விரோத தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் டிச.2-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்திருப்பது, தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் என சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை, மேகேதாட்டு பிரச்சனையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது, உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசைக் கண்டித்து, அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த காலக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது. மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டவர்கள், 6 மாத காலம் நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், தமிழக மக்களின் மிகப் பெரிய துயரமாக மாறி நிற்கிறார்கள். இந்த அரசாங்கம் அமைந்த முதல் நாள் தொட்டு தமிழ் நாட்டினுடைய மாநில உரிமைகளை அடகு வைக்கத் தொடங்கிவிட்டது.

முதல்வர் விஜய் நடித்து வெளிவந்த `ஜனநாயகன்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படுகிற நாள்வரை, காவிரியில் நமக்கு இருக்கின்ற உரிமை குறித்தோ, மேகேதாட்டில் அணை கட்டக்கூடாது என்கிற நிலைப்பாடு குறித்தோ முதல்வர் விஜய் எதுவுமே வாய் திறந்து பேசவில்லை. இதனால், ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி முழுமையாக இல்லை என்கிற ஒரு கொடூரமான நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்தும், செப்.1-ம் தேதி முதல் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், கடைமடை வரை நீர் சென்றடையவில்லை. சம்பா சாகுபடி செய்கிற விவசாயிகளும் இன்றைக்கு சொல்லொண்ணா துயரத்திலே ஆழ்ந்து கிடக்கிறார்கள். ஆனால், இதுகுறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.

அதேபோல, `மேகேதாட்டிலே அணை கட்டுவோம்’, `யார் சொல்லியும் கேட்க மாட்டோம்’ என்று கர்நாடக முதல்வர் ஆணவப் போக்கோடு தொடர்ந்து பேசி வரும் காட்சிகளைப் பார்க்கின்றோம். தமிழக முதல்வராக இருக்கிற விஜய், மேகேதாட்டில் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு உருப்படியான எந்த வேலையும் செய்யாமல், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர்களுடன் மேகேதாட்டு பிரச்சனை குறித்து பேசுவதற்கோ, கர்நாடகாவில் ஆண்டு கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வரிடம் இதுகுறித்துப் பேசி புரிய வைப்பதற்கோ விஜய் எள்ளளவும் முயற்சி மேற்கொள்ளவில்லை. `தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்குங்கள்’ என்று எவ்வளவோ முறை அதிமுக சார்பில் வலியுறுத்தியும் கேட்கவில்லை.

அதேபோல, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைமை இன்றைக்கு மிக மோசமாக இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் தவெக நிர்வாகியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இந்த ஆண்டிலேயே அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் என்று சொல்லி, போதைப் பொருளை பறிமுதல் செய்கிறார்கள்.

இந்த எல்லா கைதுகளுமே மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற DRI நடத்துகிறது. தமிழக காவல் துறையோ, உளவுத் துறையோ இதனை கண்டறியவுமில்லை, இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கூலிப் படைகளின் கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு, கொலைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கிறது. கொலை நடப்பதெல்லாம் சகஜம் தான் என்கிற தொணியில் தவெக அமைச்சர்கள் சாதாரணமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குற்றவாளிகளைப் பிடித்து சிறையில் அடைத்தால், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்து, சிறை நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அரசுக்குப் பாடம் எடுக்கின்ற காட்சிகள் இன்றைக்கு ஊடகங்களிலே வெளியாகிறது. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிற கைதிகளும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற கைதிகளும் தப்பித்து வெளியேறுவது தொடர் கதையாகி இருக்கிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்துகிறது. செஞ்சி அருகே காணாமல் போன குழந்தை, இன்று வரை கண்டுபிடிக்கப்படாத சூழல் இருக்கிறது.

`எங்கும் போதை, எதிலும் போதை’ என்கிற அளவிற்கு மாநிலமே தள்ளாடுகின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்ற போதும், தமிழ்நாட்டினுடைய முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதுகுறித்த புரிதல் கூட இல்லாமல் பொம்மை போல் அமர்ந்திருக்கிறார் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயம்.

சட்டம்- ஒழுங்கு ஒரு பக்கம் சமூக விரோதிகளால் சீரழிக்கப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் வேலியே பயிரை மேய்வது போல, தவெக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது குறித்து நீதிமன்றம் வரை சென்ற பிறகே, தற்பொழுது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ-வும், துணை சபாநாயகராகவும் இருப்பவரிடம், கோரிக்கை மனு கொடுக்கப் போனவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், பின்னர், காவல் துறையை வைத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வேன் என்று மிரட்டினார் என்கிற குற்றச்சாட்டு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் குற்றச்சாட்டாகவே இன்னும் தொடர்வதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக அமைச்சர் காந்தி ராஜ் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி, பணியில் இருந்த பெண் காவலரை விசாரிக்கின்ற காட்சிகள் வெளி வந்திருக்கிறது. இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது மட்டுமல்லாமல், அவரிடம் கேள்வி கேட்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ஒரு அமைச்சர் பரவ விடுகிறார் என்று சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது யார்?.

தவெக-வைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட அமைச்சர் ஒருவர், `இரவு நேரத்தில் கோப்புகளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்’ என்று சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தவெக-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று மீண்டும், மீண்டும் செய்தியாளர்கள் மத்தியில் சொல்லியும், புகார் பதிவு செய்யப்படாமல், விசாரணை நடத்தப்படாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியும் கிடைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது இந்தப் பொய்க் கால் குதிரை அரசு.

அதேபோல, இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சாதாரண எளிய மக்களின் வாழ்க்கையை பெரும் துயராக மாற்றி இருக்கிறார்கள். அரிசி கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதோடு, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல, மின் கட்டணம் மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து வந்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின்சார கட்டணச் சுமையை தமிழக மக்களின் தலையில் ஏற்றிக் கொண்டிருக்கிறது தவெக அரசு. மேலும், தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே தொடர் மின்வெட்டுகள் ஏற்படுவதன் காரணமாக, மக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்ற துர்பாக்கிய நிலை இந்த ஆட்சியில் நிலவுகிறது.

சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தவெக கொடுத்த வாக்குறுதிகளான, ``ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்; விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்’’ என்கிற எந்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில், விலைவாசி உயர்வும், மின்கட்டண உயர்வும் சாதாரண மக்களை வாட்டி வதைக்கின்ற காட்சிகளைக் காண்கிறோம். இதுகுறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக அரசை வலியுறுத்தினால், பொறுப்புள்ள முறையில் முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சரும் ஒரு நாளும் பதில் சொல்வதும் இல்லை; நடவடிக்கை எடுப்பதுமில்லை.

எனவே, மக்கள் விரோத தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையிலும், அவர்களுடைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துகின்ற வகையிலும், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில், டிச.2-ம் தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தலைமை செயலாளர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ரீல்ஸ் மாடல் ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், மக்கள் விரோதச் செயல்களையும் கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், மகளிர் மற்றும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT