திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் 9 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷுபாஷி ஜுங்கா(24) நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 5 பேர் சிகிச்சை பெற்று, தங்குமிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மற்ற 68 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 20-க்கும் மேற்பட்டவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 பேரின் உடல்கள் நேற்று முன் தினம் விமானம் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆதார் மோசடி
கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிர்இழந்தவர்கள் பட்டியலில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூர்ணிமா ஜுங்கா என்ற இளம்பெண்ணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆகவே, அப்பெண்ணின் ஆதார் அட்டை விபரங்கள் குறித்து, அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், பூர்ணிமா ஜுங்கா ஆந்திர மாநிலத்தில் உயிருடன் இருப்பதும், அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதார் அட்டை அவருடையது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் ஒடிசா மாநில அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், பல தொழிலாளர்கள் ஒரே ஆதார் அட்டையை பயன்படுத்தியும்,பிறருக்கு சொந்தமான ஆதார் அட்டைகளை பயன்படுத்தியும் வேலை பெற்றுள்ளதும், கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் முன்பு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஜுங்கா ஒடிசா தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
ஆகவே, விபத்து நடந்த தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஆதார அட்டை விவரங்கள் உள்ளிட்டவையை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
தனியார் தொழிற்சாலையில் உள்ள இறால் உள்ளிட்ட கடல் உணவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை நேற்று திருவள்ளூர் ஆட்சியர் கவிதா ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்தனரா? என்பது தொடர்பாக ஆதார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றார்.