சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதி்ர்த்து ராம்குமாரி்ன் தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் அதே ஆண்டு சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் காவல் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2020-ல் முடித்து வைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சென்னை காவல் ஆணையரின் அறிக்கை அடிப்படையில் ராம்குமார் மரணத்தை தற்கொலை என முடிவு செய்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பாலாஜி மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் வி.டி.பாலாஜி, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் காவல்துறை, மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக்குழு ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் அந்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டுள்ளனர்.