தமிழகம்

4 எம்எல்ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம்: இபிஎஸ் ஆஜராகும் தேதி ஆக.4-க்கு மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவின் 4 எம்எல்ஏ.க்கள் பதவி விலகிய விவகாரத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி விசாரணைக்கு ஆஜராகும் நாள் ஆகஸ்ட் 4-க்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர்.

அதற்கு முன்பாக கொறாடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

இதையடுத்து இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி புகார் அளித்திருந்தார்.

அதன் மீதான விசாரணை தற்போது நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில் இருமுறை 4 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவைத் தலைவர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.

தொடர் விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் பதவி விலகிய முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் இன்று (ஜூலை 30) நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த தேதியானது நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது. பழனிசாமி மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் ஆக. 4-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சட்டப்பேரவை செயலர் ஆர்.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT