அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி, ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள். | படம்: ம.பிரபு |
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடைபெற்றது. ஊழியர்கள் பணிக்கு வராததால் பல அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடி வருகிறது.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நேற்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமார், அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், சங்கரபெருமாள், அ,மாயவன். உள்பட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அரசு பள்ளிஆசிரியர்கள் பங்கேற்றனர். அனைவரும் எழிலக வளாகத்தில் பேரணியாகச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷம் எழுப்பினர்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது திமுக ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ளன.
ஆனால்,இன்னும் அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2003-ம் ஆண்டு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஸ்) அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
அதிலிருந்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட வேண்டும். ஆனால், சிபிஎஸ் திட்டத்தின்கீழ் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதுவரை சிபிஎஸ் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.84 ஆயிரம் கோடி.
இதில் 42 ஆயிரம் கோடியை ஜிபிஎஃப் திட்டத்தில் வரவு வைத்துவிட்டு எஞ்சிய ரூ.42 ஆயிரம் கோடியை எல்ஐசி-யில் முதலீடு செய்தாலே அந்த தொகையைக் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கிவிடலாம். இதனால், அரசுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாது.
சிபிஎஸ் திட்டத்தில் சேர்ந்த 52 ஆயிரம் குடும்பங்கள் ஓய்வூதியம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றன. எனவே, தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படாவிட்டால் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அன்றாடப் பணிகள் பாதிப்பு:
ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, சென்னை எழிலகத்தில் உள்ள அரசு துறை தலைமை அலுவலகங்கள் உள்பட பல்வேறு அலுவலகங்களில் ஊழியர்கள்பணிக்கு வராததாலும் குறைந்த எண்ணிக்கையில் பணிக்கு வந்ததாலும் பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தலைமைச் செயலகத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.