இடம்: சென்னை
படம்: உமேஷ் குமார்
சென்னை: தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் இன்று நள்ளிரவு 1:30 மணி முதல் நாளை (நவ.3) அதிகாலை 4 மணிக்குள் முரசு புயல் கரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு: நவ.1-ல் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய முரசு புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.2) அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று நள்ளிரவு 23:30 மணி முதல் நாளை அதிகாலை 04:00 மணிக்குள் கரையைக் கடக்கக்கூடும். சுமார் 3.1 கிமீ உயரத்தில் தெற்கு கேரள பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (நவ.2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
பலத்த/ சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் வீசக்கூடும்.
ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நாளை (நவ.3) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 4-ம் தேதி உள் தமிழக மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 5-ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 7-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவ.2) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன/மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ.3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.