இடம்: விசாகப்பட்டினம்

 

படம்: தீபக்

தமிழகம்

மிகத் தீவிர புயலாக நிலவும் ‘அர்னாப்’ தாக்கம் எப்படி இருக்கும்? - மீனவர்களுக்கு எச்சரிக்கை

மு.வேல்சங்கர்

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ‘அர்னாப்’ புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.28) முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் - ஏனாம் கடற்கரைப் பகுதியில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிகத் தீவிர புயலாக கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர் துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அக்.26-ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (அர்னாப்) மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, இரவு 11.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.27) காலை 8.30 மணி அளவில் மிகத் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது செவ்வாய்க்கிழமை மாலை வரை மேற்கு - வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு, இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை (அக்.28) முற்பகல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.

சுமார் 3.1 கி.மீ உயரம் வரை இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலிருந்து, 'அர்னாப்' புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன்காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.27) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.28-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அக்.29, 30 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அக்.31-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அக்.28-ம் தேதி முதல் அக்.31- ம் தேதி வரை ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ.1, 2 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

புயல் காரணமாக, வட தமிழக கடலோரப்பகுதிகளில் அக்.28-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்படி தேதிகளில் மணிக்கு 115 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் இடையிடையே 140 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசும்.

இதுபோல, அந்தமான் கடல்பகுதியில் அக்.30-ம் தேதி வரையும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் அக்.29-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் மேற்படி தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT