சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ‘அக்வான்’ புயலாக மாறியது. இது மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே 20-ம் தேதி கரையை கடக்கக்கூடும். இதனால் சென்னை, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 18, 19-ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கே நகர்ந்து நேற்று ‘அக்வான்’ (Akvan) புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை தீவிர புயலாக நிலவக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.20-ம் தேதி நண்பகல் மிகத் தீவிரப் புயலாக நெல்லூர் - துனி இடையே ஆந்திரகடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120-130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கிமீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18, 19-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (40-50 கிமீ வேகம்) மிக கனமழையும் காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். வட கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே அங்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.
ஆணையம் அறிவுறுத்தல்
இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வானிலை தொடர்பான கணிப்புகளை வெளியிடும் சில தனி நபர்கள் மாறுபட்ட கணிப்புகள், மதிப்பீடுகளை பரப்பி வருவது கவனிக்கப்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளுக்கு மாறாக முரண்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் மக்களிடம் தேவையற்ற அச்சம், பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, அரசின் துறைகள் வெளியிடும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.