சென்னை: சென்னை பெருங்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தளத்தை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குநர் சத்யநாராயணன் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “கடந்த நவம்பர் 9-ம் தேதி காலை 11.01 மணி முதல் 11.55 மணி வரை, நிறுவனத்தின், தனியார் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் சட்ட விரோதமாக 24 முறை பணப்பரிவர்த்தனை செய்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.1,03,76,860 கையாடல் செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். நிறுவனம் பயன்படுத்தும் வங்கியின் ஏபிஐ (API) பணப்பரிவர்த்தனை வசதியில், அங்கீகரிக்கப்பட்ட ஐ.பி. முகவரி மற்றும் பாதுகாப்பு குறியாக்கச் சான்றிதழ் மூலமாக மட்டுமே பணம் அனுப்ப முடியும்.
ஆனால், நிறுவனத்தின் சர்வர் மற்றும் தரவுத்தளப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இந்த 24 பரிவர்த்தனைகளும் நிறுவனத்தின் கணினி அமைப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.