விழுப்புரம்: திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதால் அதிமுக தனது சுய நிலையை இழந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. மக்களின் நன்மதிப்பையும் இழந்து வருகிறது. யாருடைய கருத்தையும் கேட்க மாட்டேன், குடும்பத்தினர் கருத்தை மட்டும் கேட்பேன், பணம் கொடுப்பவர், பெற்றுத் தருபவர்களின் பேச்சை மட்டும் பழனிசாமி கேட்பதால் நினைத்து பார்க்க முடியாத இழப்பை அதிமுக சந்தித்துள்ளது.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால், முதல்வராக வர வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதால் அதிமுக தனது சுய நிலையை இழந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள் தற்போது இயக்கத்தைவிட்டு செல்கின்றனர். அவர்களின் மனவலியை உணராமல் துரோகி என சாதாரணமாக பழனிசாமி சொல்கிறார்.
தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளேன் என பொய் சொல்கிறார். அதில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக தயவால்தான். பாமகவுடன் கூட்டணி இல்லை என்றால், வட மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இதுதான் உண்மை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தவறுகளை பழனிசாமி உணர வேண்டும். தவறுகளை சரி செய்ய வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் எல்லோரும் இணைந்து செயல்படலாம். தனது மகனை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக, பழனிசாமி தற்போது சமூக வலைதளத் தில் நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார். அதிமுகவின் படுதோல்விக்கு காரணம் பணம் மற்றும் பதவி வெறி. நீங்கள்தான் இப்போதும் பொதுச்செயலாளர். எங்கள் பக்கமும் குறைகள் இருக்கலாம். தலைமை பொறுப்புக்கு வந்தவர், எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதற்கு நேர்மாறாக, கட்சியில் உள்ளவர்கள் வெளியேறும் நிலையை உருவாக்குகிறார்.
பொதுக்குழுவை உங்கள் விருப்பப்படியே ஒரு தேதியில் கூட்ட வேண்டும். அதற்கு காலதாமதம் ஏற்பட்டால் செயற்குழுவை கூட்ட வேண்டும். அதற்கு ஏன் அச்சப்படுகிறீர்கள், மாற்று கருத்தை ஏற்றுக் கொள்ளும் தலைவர்தான் சிறந்த தலைவர். வெற்றிக்காக இறங்கி வர வேண்டும். சரியான பாதைக்கு அதிமுகவை கொண்டு செல்லும் வழிமுறையை கலந்து பேசி முடிவு செய்யுங்கள்.
நீங்கள் திமுகவுடன் போக வேண்டும் என்று சொன்ன பிறகு தான், இந்த கருத்துக்கு உடன்பட முடியாது என்று நாங்கள் வெளியே வந்தோம். இந்த ஒரு கருத்தை தவிர, 8 ஆண்டு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் காலம் நம்கையை விட்டுப் போகவில்லை.
நாங்கள் சில காலம் பொறுத்திருப்போம். எங்களுக்கு என்ன வழிமுறைகள் என்று எங்களுக்கும் தெரியும். அந்த நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.