சென்னை: முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியவரும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான கம்பம் கே.எம்.அப்பாஸ் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட கம்பம் கே.எம். அப்பாஸ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரமளிக்கிறது.
உழவர்களின் வாழ்வாதாரம், நீர்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல தளங்களில் களப்பணியையும் கருத்தியல் தெளிவையும் இணைத்துச் செயலாற்றிய அவரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உடனிருந்து களமாடிய தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நாதக ஒருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.