கடலூர்: நெய்வேலி என்எல்சியில் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என கடலூர் மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மின்சாரம் வழங்கக் கூடிய மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகவும், கடலூர் மக்களை தொகுதிக்கு உட்பட்டதாகவும் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நெய்வேலி அனல்மின் நிலையங்கள் விளங்குகின்றன. அங்கு செயல்பட்டு வரும் அனல்மின் நிலையம்-2 சுமார் 47 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் மின் நிலையங்களில் பல்வேறு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள அதிகம்.
எனவே, மின்நிலையத்தில் முக்கிய உபகரணங்கள், கட்டமைப்புகள் மற்றும் பாகங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் பழுதுபார்த்தல், பராமரித்தல் அல்லது மாற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
இதன் காரணமாகவே நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையம்-1 செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அனல்மின்நிலையம்-2-க்கு Life Extension Programme (LEP) உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் பலமுறை என்எல்சி நிர்வாகத்திடமும், நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளேன்.
ஆனால், இதுவரை நான் வைத்த கோரிக்கைகளுக்கும், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கும் உரிய மற்றும் நேரடியான பதில் கிடைக்கவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் பொதுவான பதில்களே வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அனல்மின்நிலையம்-2 ன் Life Extension Programme குறித்து தெளிவான நடவடிக்கையோ அல்லது உரிய பதிலோ இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி காலை சுமார் 10 மணியளவில், முத்து கிருஷ்ணன் (37) என்ற தொழிலாளி சுமார் 15 மீட்டர் உயரமுள்ள மேடையில் ஏறி பணிபுரிந்தபோது, அந்த மேடை முறையான பராமரிப்பின்றி துருப்பிடித்து சேதமடைந்திருந்த காரணத்தால் எதிர்பாராதவிதமாக சாய்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் காயமடைந்த முத்துகிருஷ்ணன், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி வேதனைக்குரியது.
ஓர் உயிரிழப்புக்கு காரணமான என்எல்சி நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. மேலும் என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தொழிலாளர் உயிரிழப்புக்கு காரணமான விபத்து ஆகிய இரு விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிட்டு, தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிர்வாகத்தில் நிரந்தரப் பணி வழங்கவும், குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் என்எல்சி நிர்வாகமும், மத்திய அரசும் உடனடியாக வழங்க வேண்டும்.
இனி யாரும் பாதுகாப்பு குறைபாட்டால் பலியாகாத வகையில், அனல்மின் நிலையம்-2ல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இதன் தீவிரத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எம்.பி விஷ்ணு பிரசாத் கூறியுள்ளார்.